இன்று ஒரு தகவல் – 2

தாவரங்களை உண்ணும் பூச்சிகளை பற்றி நாம் அறிந்திருப்போம், பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் பற்றி அறிந்ததுண்டா? வாருங்கள் சில பூச்சிகளை உண்ணும் தாவரங்களை பற்றி பார்ப்போம்.

உலகில் பல்வேறு இடங்களில் பூச்சிகளை உண்ணும் தாவர வகைகள் பல இருக்கின்றன. அதில் சில முக்கிய தாவரங்கள்,

  • வீனஸ் பூச்சி கொல்லி (Venus Fly Trap)
  • ட்ரொசேரா (Drosera)
  • கெண்டி அல்லது நெப்பந்திசு (Nepenthes)
  • சாராசேனியா (Sarracenia)
  • ஆல்ட்ரோவாண்டா வெசிகுலோசா (Aldrovanda Vesiculosa)

வீனஸ் பூச்சி கொல்லி (Venus Fly Trap)

வீனஸ் பூச்சி கொல்லியானது சிறு பூச்சி வகைகளை உட்கொள்ளும். இரண்டு இலை போல் உள்ள அமைப்பு பூச்சிகள் வரும்வரை திறந்து இருக்கும். உள் அமைப்பு பூச்சிகளை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. சில பூச்சிகள் இந்த தாவரத்தை உணவென்று எண்ணி மாட்டிக்கொள்ளும். உள்ளே நுண்ணிய முட்கள் போன்ற அமைப்பு இருக்கும். பூச்சிகள் அந்த நுண்ணிய முட்கள் மீது உறையும்பொழுது, உடனே மேல் அமைப்பு மூடிவிடும். ஆகையால் பூச்சிகள் உள்ளே சிக்கி வெளியே வரமுடியாமல் இறந்து விடும். பின்பு வீனஸ் தாவரம் பூச்சியில் உள்ள சத்துகளை அதை இறுக்குவது மூலமாக எடுத்துக்கொள்ளும். இப்படி தேவையான சத்துகளை எடுக்க வீனஸ் தாவரத்திற்கு பத்து நாட்கள் ஆகும். மிக சிறிய பூச்சிகள் தப்பித்து விடும், அப்படி பூச்சிகளை இழந்துவிட்டால் மீண்டும் 12 மணி நேரத்துக்குள் இலை அமைப்பு திறந்து விடும்.

ட்ரொசேரா (Drosera)

வீனஸ் தாவரம் போன்றே ட்ரொசேரா தாவரமும் பூச்சிகளை கவர்ந்து கொல்லும் தன்மை உடையது. இத்தாவரத்தில் முட்கள் போன்ற அமைப்பின் மேலே பனித்துளி போல் ஒரு திரவம் இருக்கும். இதை பார்க்கும் பூச்சிகள், அத்திரவத்தால் கவரப்பட்டு, அதை உட்கொள்ளலாம் என்று மேலே உட்காரும். அந்த திரவம் பசை போன்றது, ஆகையால் மேலே இருக்கும் பூச்சியானது நன்றாக அப்பசையினில் மாட்டிக்கொள்ளும். சிறிது நேரத்தில் அந்த பூ போன்ற அமைப்பு அப்படியே சுருங்கி பூச்சியை கொன்று விடும்.

பிறகு பூச்சிகளில் உள்ள மொத்த சத்துகளையும் உட்கொண்டபின் விரிந்துவிடும்.

கெண்டி அல்லது நெப்பந்திசு (Nepenthes)

Nepenthes with insect

இந்த தாவரமானது மேற்கண்ட இரண்டு தாவரங்களை காட்டிலும் வித்தியாசமானது. இந்த தாவரமானது கோப்பை போன்ற பூக்களை உடையது. இந்த கோப்பை போன்ற பூக்களுக்குள் சுவையான திரவம் நிரம்பி இருக்கும். பூக்களின் உள் பகுதியில் மெழுகு போன்ற திரவம் காணப்படும். உள்ளே நிரம்பி இருக்கும் திரவமானது பூச்சிகளை கவர கூடியது. பூச்சிகள் மட்டுமில்லாமல் எலிகள், தவளைகள், நத்தைகள் மற்றும் சிறிய விலங்குகளும் கவரப்பட்டு மாட்டிக்கொள்ளும். உள்ளே பூச்சி அல்லது வேறு உயிரினம் விழுந்துவிட்டால், அவ்வுயிரினத்தால் மேலே வரமுடியாது. சுற்றி உள்ள மெழுகு போன்ற அமைப்பில் ஏறும்பொழுது வழுக்கி மீண்டும் திரவத்திற்குள் விழுந்துவிடும். கடைசியில் போராட முடியாமல், அந்த திரவத்திற்குள் மூழ்கி உயிரைவிடும். பிறகு, இந்த தாவரம் அந்த திரவத்தை பயன்படுத்தி உள்ளே இருக்கும் உயிரினத்தின் சத்துகளை எடுத்துக்கொள்ளும். இந்த பூக்களினால் உள்ளே இருக்கும் உயிரினத்தை வெளியே அனுப்ப முடியாது, ஆகையால் அனைத்து சத்துகளையும் எடுத்த பின்பு, பூக்களும் இறந்து விடும். காரணம், இந்த தாவரத்தினால் மீண்டும் நிறைய பூக்கள் பூக்க வைக்க முடியும் என்பதனால்.

சாராசேனியா (Sarracenia)

இந்த தாவரம் ட்ரொசேரா போன்றுதான் பூச்சிகளை பிடிக்கும். இந்த தாவரத்தின் பூக்கள், நீளமாக கோன் போன்ற அமைப்பை கொண்டது. இந்த பூக்களே பூச்சிகளை கவரும் வண்ணம் அழகாக இருக்கும். ட்ரொசேரா போன்றே உள்ளே திரவமும், சுற்றியும் வழவழப்பான திரவத்தையும் கொண்டது. உள்ளே சென்ற பூச்சியினால் வெளியே வர முடியாது. ட்ரொசேரா போன்றே சத்துகளை உட்கொண்டுவிட்டு பூக்களும் இறந்துவிடும்.

ஆல்ட்ரோவாண்டா வெசிகுலோசா (Aldrovanda Vesiculosa)

ஆல்ட்ரோவாண்டா வெசிகுலோசா உருவத்திலும் செயலிலும் வீனஸ் தாவரம் போன்று தான் இருக்கும். ஆனால் இதில் உள்ள வேற்றுமை என்னவென்றால், அல்ட்ராவேண்டா தாவரம் தண்ணீருக்குள் இருக்கும். தண்ணீரில் உள்ள சிறிய மீன்கள் அல்லது வேறு உயிரினங்களை உட்கொள்ளும். வீனஸ் தாவரம் போன்றே, பூச்சிகளில் இருந்து சத்துக்களை எடுத்துக்கொண்டபின் விரிந்துவிடும்.

இன்னும் நிறைய பூச்சிகளை உண்ணும் தாவர வகைகள் இருக்கின்றன. எல்லாம் ஒரே தன்மை உடையதுதான்.

இந்த தகவல் மூலமாக புதிதாக ஒரு விடயத்தை நீங்கள் தெரிந்துகொண்டுளீர்கள் என்று நம்புகிறேன். இந்த தகவல் பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கு கீழ்கண்ட Facebook பட்டன் பயன்படுத்தி ஷேர் செய்யுங்கள். ஏதேனும் திருத்தும் இருப்பின் கீழே கமெண்ட் செய்யுங்கள். தினமும் இது போன்ற சுவாரசியமான தகவல்கள் வேண்டுமென்றால், கீழே இருக்கும் சிவப்பு பெல் பட்டனை அழுத்தி “Allow “கொடுங்கள், உங்களுக்கு சுவராசியமான தகவல்கள் Notification-ஆக வரும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.