வர்ஜீனியா, அமெரிக்கா ஜனவரி 14-ஆம் தேதியை பொங்கல் தினமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது கடந்த பிப்ரவரி மாதமே வெளியானது. தற்போது இதை தெரியாத மக்கள் தெரிந்து கொள்வதற்காக பல ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

வர்ஜீனியா, அமெரிக்கா, மற்றும் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அனைவரையும் பெருமிதத்தில் ஆழ்த்திடும் வகையில், தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் வர்ஜீனியாவில் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை வர்ஜீனியா பொதுச் சபை தற்போது அறிவித்துள்ளது. உலகத்தின் மிகப்பழமையான ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்றும் தொடர்ந்து இயங்கி வரும் சட்டசபை என்ற பெருமை உடைய வர்ஜீனியா பொதுச்சபையில், பிரதிநிதி டேவிட் புலோவா (ஜனநாயகக்கட்சி – பேர்பாக்சு) அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் பிப்ரவரி 17 2017 அன்று நிறைவேறியது. இத்தீர்மானத்தின்படி, 2018 ஜனவரி 14 2018 முதல் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் ஜனவரி 14ம் தேதி பொங்கல் திருநாளாக வர்ஜீனியா காமன்வெல்த்தால் அங்கீககரிக்கப்பட்டுள்ளது.

வர்ஜீனியா பொதுச்சபையில் இத்தீர்மானத்தினை முன்மொழிந்த பிரதிநிதி புலோவா, பொங்கல் திருநாளுக்கும் நன்றிநவிலல் திருநாளுக்கும் உள்ள ஒற்றுமைகளைக் குறிப்பிட்டுப் பேசினார். கோடிக்கணக்கான தமிழர்கள் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ் மக்களுக்கு இத்திருநாள் எத்துணை சிறப்பானது என்பதை எடுத்துரைத்தார். செனட் மற்றும் சபையின் பணிக்குழு உறுப்பினர்கள் புலோவா அவர்கள் விளக்கிய பழம்பெரும் தமிழ்ப் பண்பாட்டு மரபைப் பெரிதும் வியந்து, தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினர்.

இத்தீர்மானம் நிறைவேறிட உழைத்த வள்ளுவன் தமிழ் மைய உறுப்பினர்கள் மற்றும் சட்ட ஆலோசகர் திரு.சிரீஸ்கந்தராஜா, இந்தத் தீர்மானத்துக்குப் பெரிதும் ஆதரவு அளித்து வர்ஜீனியா சபைக்குக் கொண்டு செல்ல உதவிய, பேர்பாக்சு நகர் மற்றும் பேர்பாக்சு கவுண்டி மக்கள் பிரதிநிதி திரு. புலோவா அவர்களின் சேவையைப் பெரிதும் பாராட்டி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

ஜனவரி 14ம் நாளைப் பொங்கல் திருநாளாக அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பதை, தமிழ்-அமெரிக்க மக்கள் வர்ஜீனியாவுக்கும், அமெரிக்கத் திருநாட்டுக்கும் அளித்து வரும் சமுதாய, பொருளாதார, அரசியல் பங்களிப்புகளை, வர்ஜீனியா அரசாங்கம் அங்கீகரித்திருக்கும் ஒரு சிறப்பான தருணமாகக் கருதலாம். அதே நேரத்தில், நீண்ட நெடிய தமிழ் மரபை நினைவு கூர்ந்து, தமிழ் மொழியையும், பண்பாட்டையும் அமெரிக்காவில் கொண்டாடி, எதிர்வரும் தலைமுறைகளுக்கு அவற்றை முன்னெடுத்துச் செல்லக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பையும் இச்செய்தி வர்ஜீனியா/அமெரிக்கத் தமிழர்களுக்குக் கொடுத்துள்ளது.

இது கண்டிப்பாக நம் அனைத்து தமிழ் மக்களுக்கும் சந்தோசமான செய்தியாக இருக்கும்.
அறிவிப்பு பற்றிய காணொளி பதிவு.

விர்ஜினியா வள்ளுவன் தமிழ் மையம் பற்றி பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

Click Here.

மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.